

சென்னை,
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது, அரசு வக்கீலின் கருத்தை ஏற்றுக்கொண்டு, தேர்வை ஒத்திவைக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால் ஏற்படுகிற பாதிப்பில் இருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உரிய தீர்வுகளை காண முயலவேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால் நடைமுறைக்கு வருகிற நீட் தேர்வை ரத்து செய்வதற்குரிய முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வதற்கு, பிரதமர் மோடியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜனதா அரசு தான் காரணமாகும். அதைத் தடுக்கத் தவறிய மாநில அரசு உடனடியாக மத்திய அரசோடு தொடர்புகொண்டு, மிக அதிகளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.