மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

மின்னணு சாதனங்களில் மூழ்கிய குழந்தைகள், கொரோனாவை விட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால் பதிவான வழக்கில் சிறுவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்த திருவள்ளூர் சிறார் நீதி குழுமம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஊரடங்கு காலத்தில் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து, மின்னணு சாதனங்களில் மூழ்கிய குழந்தைகள், கொரோனாவை விட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளனர் என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

இதன் மூலம் பதின்ம வயது குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்கள் சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் பதிவு ஆறுதலளிக்கும் வகையில் உள்ளது என நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் பள்ளிக்கல்வித்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சம்பவம் நடந்தபோது மைனர் என சிறார் நீதிவாரியத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும், சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com