அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பசுமை தீர்ப்பாயம்

விபத்து நடப்பதற்கு முன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பசுமை தீர்ப்பாயம்
Published on

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் இருந்து கடந்த 27-ந் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து எண்ணூர் கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க முடிவு செய்தது.

அதன்படி, இந்த வழக்கு இன்று (2-ம் தேதி) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. அப்போது எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்படும். தொழில்துறை பாதுகாப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மேலும் விபத்து நடப்பதற்கு முன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?; உர ஆலைகளில் அடிக்கடி ஆய்வு ஏன் நடத்தவில்லை என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com