

சென்னை,
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங் கள், பஸ் நிலையங்கள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.
அவருடைய உத்தரவை செயல்படுத்தும் விதமாக 717 கடைகள் மூடப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறைகளையும் முறையாக பின்பற்ற அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதிலும் சமீபகாலங்களாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003, விதி 11ஏ கொண்டுவரப்பட்டது. அதில் 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கவோ, வழங்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதியை டாஸ்மாக் கடைகளில் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவைதான் தற்போது டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை பணியாளர்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதன்படி, டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை பணியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 21 வயதுக்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடைப்பணியாளர்கள் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது. சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.