பொதுமக்களை அச்சுறுத்தும் ஆடியோவை பரப்பினால் நடவடிக்கை: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை

கஸ்டமர் காலில் 6 இலக்க நம்பரில் இருந்து வரும் அழைப்பை ஏற்றால் செல்போன் வெடித்து விடும் என வாட்ஸ்அப் ஆடியோ பரவி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து 6 இலக்க நம்பரில் இருந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை ஏற்றால் செல்போன் வெடித்து விடும் என தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பேசுவதாக வாட்ஸ்அப் ஆடியோ பரவி வருவது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த வாட்ஸ்அப் ஆடியோ தவறாக பரப்பப்பட்டது எனவும் தூத்துக்குடியில் இதுபோன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை எனவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது வாட்ஸ்அப்பில் "ஹலோ நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன், கஸ்டமர் காலில் 5 அல்லது 6 நம்பரிலிருந்து அழைப்பு வருது, அதை யாரும் அட்டன் பண்ண வேண்டாம். அதை அட்டன் பண்ணினால் பிளாஸ்ட் ஆகி செல்போன் வெடித்து விடும், தூத்துக்குடியில் 27 பேர் செத்துட்டாங்க, இத சேர் பண்ணுங்க" என வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பரவி வருகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனவும், இது பழைய வாட்ஸ்அப் ஆடியோ எனவும், அந்த பொய்யான வாட்ஸ்அப் ஆடியோ தவறாக தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இந்த வாட்ஸ்அப் ஆடியோ குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும், மேலும் இந்த வாட்ஸ்அப் ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலோ வாட்ஸ்அப்-ல் தவறான தகவலை பரப்புவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறி மேற்படி ஆடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






