அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறை எச்சரிக்கை

நோயாளிகளுக்கு இடையூறாக அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்று முன்தினம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னை பாலவாக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் இந்த முகாமினை தொடங்கி வைத்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இந்த முகாம்களை தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள் அல்லாமல் ஒருசில அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து ஆய்வு செய்தனர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கட்சி நிர்வாகிகள் சிலர் மருத்துவமனை நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் இன்றி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவர்கள் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சுகாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அனுமதியின்றி சிகிச்சை அளிக்கும் காட்சிகளை வீடியோ எடுப்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றியிருப்பவர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும். நோயாளிகளின் தனி உரிமைக்கு இடையூறு செய்வது சட்டப்படி குற்றமாகும்.

அதன்படி, தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ன்படி, மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகளை அனுமதியின்றி படம்பிடித்து பரப்புவது மற்றும் பி.என்.எஸ். பிரிவு 221-ன்படி, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட சட்டபிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பர நோக்கத்தில் நோயாளிகளின் தனியுரிமை பாதிக்கப்படுவதையும், மருத்துவப்பணியின் தரத்தை குறைப்பதையும் சுகாதாரத்துறை கட்டாயம் அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com