மழை சேத விவரங்களை ஒருவாரத்துக்குள் மனுவாக அளித்தால் நடவடிக்கை

மழை சேத விவரங்களை ஒரு வாரத்துக்குள் மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
மழை சேத விவரங்களை ஒருவாரத்துக்குள் மனுவாக அளித்தால் நடவடிக்கை
Published on

மழை சேத விவரங்களை ஒரு வாரத்துக்குள் மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

உலர் தீவனங்கள்

மாவட்டத்தில் போதிய மழை பெய்தும், பெரும்பாலான ஏரிகள் வறண்டு காட்சியளிக்கிறது. தென்பெண்ணை ஆற்று நீரை மின்மோட்டார் மூலம் ஏரிகளுக்கு நிரப்பிட வேண்டும். தற்போது ஒரு புல் கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதனால் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, மானியத்தில் உலர் தீவனங்கள் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுக்க அனுமதி கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி வாரசந்தை மூலம் வருவாய் கிடைக்கும் நிலையில், அங்கு போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

இழப்பீடு

அரசு பாக்கு செடிகளை மானியத்தில் வழங்க வேண்டும். தென்னையில் இருந்து நீராபானம் எடுக்க பயிற்சி அளிக்க வேண்டும். ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தியும் இதுவரை இத்திட்டத்தில் பலருக்கு இணைப்புகள் வழங்கப்படவில்லை.

100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

ஒரு வாரத்தில் மனு

மானியத்தில் உலர்தீவனம் கோடைக்காலத்தில் மட்டுமே வழங்கப்படும். மண் பாண்ட தொழிலாளர்கள் ஏரியில் இருந்து மண் எடுக்க 31 பேர் மனு அளித்துள்ளனர். பரிசீலனையில் உள்ளது. வேளாண் பொறியியல் துறை மூலம் ஒரு மணி நேரத்திற்கு டிராக்டருக்கு ரூ.400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக டிராக்டர்கள் பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தென்னையில் நீராபானம் எடுப்பது தொடர்பாக எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் பயற்சி அளிக்கப்படுகிறது. திம்மாபுரம் தோட்டக்கலைத்துறை பண்ணையில் விவசாயிகள் பாக்குசெடிகளை விலை கொடுத்து கொள்முதல் செய்துக் கொள்ளலாம். மழைக்காலங்களில் பயிர்கள், உடைமைகள் சேதம் ஏற்பட்டால் அதிகப்பட்சம் ஒரு வாரத்திற்குள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தாரிடம் மனு அளித்தால் மட்டுமே நிவாரண பட்டியலில் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com