

கோவை,
கோவை மெட்ரோ ரெயில் திட்டம் மீண்டும் ரத்து செய்யப்படாமல் இருக்க, அதற்கான திட்டங்களையும், ஆய்வுகளையும் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தற்கு முக்கியமான காரணம், இதுநாள் வரை அவர்கள் சந்தித்த ஏமாற்றங்களுக்கு மாறுதலாக ஒருவர் வர வேண்டும் என்ற ஆசைதான். இதற்கான தீர்வாக அவர்கள் த.வெ.க. தலைவரான விஜய்யை நமது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தேர்வு செய்துள்ளனர்.
அவர்களின் நம்பிக்கையை 100 சதவீதம் நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. அதேபோல், மக்கள் எனக்கு இந்த எம்.எல்.ஏ. பதவியை வழங்கி, அவர்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த பிரதிநிதித்துவத்தை வைத்து சட்டமன்றத்தில் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது எனது கடமை.
கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர அனுமதி தர வேண்டும் என பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். நான் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற உடனேயே, இங்கு இருக்கக்கூடிய மாநகராட்சி அதிகாரிகளிடம் இதற்கான திட்டங்கள் பற்றிதான் கேட்டிருக்கிறேன்.
அதேபோல், கோவை மெட்ரோ ரெயில் திட்டம் மீண்டும் ரத்து செய்யப்படாமல் இருக்க, அதற்கான திட்டங்களையும், ஆய்வுகளையும் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம். மக்களுக்கு தேவையான அனைத்தையுமே மக்கள் நம்மிடம் கேட்பதற்கு முன்பே செய்ய வேண்டும் என்ற கடமை எங்களுக்கு உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.