

சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் மற்றும் ஐசரி கணேஷ் தலைமையில் இரு அணிகள் மோதியது. இந்த தேர்தலுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சனிக்கிழமை விடுமுறை தினமான ஜூன் 22-ந்தேதி மாலை தன் வீட்டில் இருந்து நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். வழக்கு விசாரணைக்கு முன்பாக அனந்தராமன் என்பவர், நீதிபதியை தொலைபேசியிலும், நேரிலும் அணுகினார். இந்த வழக்கு விசாரணைக்கு தள்ளிவைக்கவேண்டும். அவ்வாறு தள்ளிவைத்தால் தேர்தல் தள்ளிப்போகும். இதை ஐசரி கணேஷ் விரும்புவதாக அவர் கூறினார்.
இதையடுத்து அனந்தராமன் மற்றும் ஐசரி கணேஷ் மீது நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார். அதில், அனந்தராமன் எனக்கு முன்பே அறிமுகமானவர் என்றாலும், இதுபோன்ற செயல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவர்கள் நீதிபரிபாலனத்தில் தலையிட்டுள்ளனர். எனவே, இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி தனித்தனியாக பதில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அனந்தராமன் தாக்கல் செய்த மனுவில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்தார்.
ஐசரி கணேஷ் தாக்கல் செய்த மனுவில், நீதித்துறையின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எப்போதும் நீதித்துறை நிர்வாகத்தில் தலையீடு செய்தது இல்லை. நான் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் அனந்தராமன் மூலமாக விசாரணையை தள்ளிவைக்கக்கோரி யாரையும் அணுக சொல்லவே இல்லை. நீதிபதியிடம் அனந்தராமன் பேசியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. வழக்கு விசாரணையை பாதிக்கும் விதமாகவும் நடந்து கொள்ளவில்லை. இருந்தபோதும் என்னுடைய கவனத்துக்கு வராமல் துரதிர்ஷ்டவசமாக கடந்த ஜூன் 22-ந்தேதி நடந்த சம்பவத்துக்காக நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனவே என்னுடைய மன்னிப்பை ஏற்று இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் நீதிபதிகள், சமூகத்தில் பின்தங்கிய, புறக்கணிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காகவும், திருநங்கைகள், ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோரது நலனுக்காகவும் ரூ.10 லட்சத்தை ஐசரி கணேஷ் வழங்கவேண்டும். இந்த தொகையை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணை குழுவிடம் 2 வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.