காஷ்மீரில் சட்டப்பிரிவுகளை நீக்கிய விவகாரம்: மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது நடிகர் கமல்ஹாசன் பேட்டி

காஷ்மீரில் சட்டப்பிரிவுகளை நீக்கிய விவகாரம் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
காஷ்மீரில் சட்டப்பிரிவுகளை நீக்கிய விவகாரம்: மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது நடிகர் கமல்ஹாசன் பேட்டி
Published on

சென்னை,

2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வாழ்க்கை பயணம் குறித்த ஆவணப்படத்தை இயக்குனர் டெரக் டோனன் தி பிரைஸ் ஆப் பிரீ என்ற பெயரில் ஏற்கனவே தயாரித்து இருந்தார்.

அந்த ஆவணப்படம் மகளிர், குழந்தைகள் நல மையம் மற்றும் ஜேப்பியர் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் திரையிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தலைமை தாங்கினார். இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ஜேப்பியர் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரெஜினா உள்பட பலர் கலந்து கொண்டனர். திரையிடும் நிகழ்ச்சி முடிந்ததும், கைலாஷ் சத்யார்த்தி பெருமைப்படுத்தப்பட்டார்.

பெண் சாதனையாளர்கள் விருது

அதனைத் தொடர்ந்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது. பின்னர், ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, டாக்டர் கிருத்திகா உதயநிதி, டாக்டர் மனோரமா, விளையாட்டு வீராங்கனை பவானி தேவி ஆகியோருக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, நடிகர் கமல்ஹாசன், ரெஜினா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி முடிந்ததும், நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்வாதிகார போக்கு

காஷ்மீரில் 370 மற்றும் 35(ஏ) ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விவகாரம், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதில் காஷ்மீர் மக்கள் ஏமாற்றப்படவில்லை. இந்திய மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். கருத்துக்கேட்பு என்பது வழக்கமான செயலாக இல்லாமல் போய்விட்டது.

கடந்தமுறை இந்த அரசுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்த போது, ஊழல் இல்லாத நாடாக உருவாக்குவேன் என்றார்கள். இந்த முறை முழு பலம் இருக்கிறது என்ற தைரியத்தில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடாமல் முடிவு எடுத்து இருக்கிறார்கள். இது அவர்களின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது.

கலந்துரையாட வேண்டும்

அ.தி.மு.க. இதற்கு ஆதரவு கொடுத்ததில் வியப்பு இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவாக இருக்க வேண்டும், எல்லோருக்கும் சமமாக உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதெல்லாம் சரி. ஆனால் ஜனநாயகத்தில் கலந்துரையாட வேண்டும் என்ற முறை இருக்கிறது. அது மீறப்பட்டு இருக்கிறது.

இவர்களுடைய போக்கு வேறு ஏதும் பேசாதீர்கள். நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருங்கள் என்று சொல்ல விரும்புவதாகவே தோன்றுகிறது. குரல்கள் உள்ளவர்கள் நியாயத்துக்காக உயர்த்தியே ஆக வேண்டும். அதை செய்ய வேண்டும். அதன் ஒரு துளி தான், நான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com