

ஆலந்தூர்,
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து தமிழகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 400 வருடங்களுக்கு முந்தைய புராதன மண்டபம் சிதைக்கப்பட்டு உள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் தூண்கள் கட்டப்பட்டதால் தீக்கிரையாகாமல் உள்ளன.
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களா? வியாபார தலங்களா? என்று கேட்கும் அளவுக்குதான் பல கோவில்கள் உள்ளன. இந்து அறநிலைத்துறை கோவில்களை பாதுகாக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் உதாசினப்படுத்தி வருகின்றன.
மதுரையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் கோவில்களை கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாற்று மதத்தினரும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கடை வைத்திருக்கிறார்கள். இதனால் தீ விபத்து குறித்து முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கோவிலில் மாற்று மதத்தினர் கடை வைக்கும்போது புனிதத்தன்மை கெட்டுவிடுகிறது.
உலகத்திலேயே மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது. 50 கோடி பேருக்கு முழுமையான மருத்துவ காப்பீடு கிடைக்க உள்ளது. இது பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை. இதை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர். உலக தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள் பாராட்டுகின்றனர்.
ஆனால் இதை அரசியலாக்கி மக்களுக்கு கிடைக்க வேண்டிய சுகாதார திட்டத்தை தடுக்க எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றனர். இது வெற்றிகரமாக மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் ப.சிதம்பரம் போன்றவர்கள் குறை சொல்வார்கள். அவர்கள் மக்களின் மீது அக்கறை இல்லாதவர்கள்.
காவிரி தண்ணீர் கிடைக்காது என்று சுப்பிரமணியசாமி சொன்ன கருத்து எங்களுடையது அல்ல. அவர் எப்போதும் தனிப்பட்ட முறையில் கருத்துகளை சொல்லி பழக்கப்பட்டவர். தமிழக மக்களுக்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. உரிமைக்காக போராடி வருகிறோம்.
பாரதீய ஜனதாவின் நிழல் அரசாக மாநில அரசு செயல்படுவதாக தினகரன் சொல்லலாம். ஆனால் தினகரன் யாருக்கு நிழலாக செயல்படுகிறார். அவரது அரசியல், விலை போக வேண்டும் என்று இவ்வாறு பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவரிடம், நான், இந்து விரோதி அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் சொல்லி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் (கமல்ஹாசன்) வசனத்தை மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருப்பார். எதிர்ப்பு வந்ததும் ஒரு வசனத்தை பேசுவார். மற்றொரு எதிர்ப்பு வந்ததும் அதற்கு வேறு ஒரு வசனத்தை பேசுவார். இதற்கு நான் பதில் சொல்லமுடியாது என்றார்.
தொடர்ந்து அவரிடம் துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை சொல்கிறார்கள். மீண்டும் சசிகலா தலைமை ஏற்க தூது நடப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, இது எல்லாம் தகவல்கள் தான். தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றார்.