சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதி பெயர் இடம்பெற வேண்டும் பிரபு கோரிக்கை

சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதியின் பெயர் இடம்பெற வேண்டும் என நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதி பெயர் இடம்பெற வேண்டும் பிரபு கோரிக்கை
Published on

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அடையாறில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தினுள் கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

மணிமண்டப திறப்பு விழா இன்று காலை நடந்தது. காலை 10.20 மணியளவில் துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபு, சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதியின் பெயர் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நடிகர் பிரபு பேசுகையில், அம்மா (ஜெயலலிதா) மறைவுக்கு சில காலத்துக்கு முன்பு எங்கள் குடும்பத்தை கூப்பிட்டு சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க என்னை விட வேறு யார் இருக்க முடியும் என்றார். இன்று அம்மா கனவு நினைவாகிறது. இந்த மணிமண்டபத்தை கட்டிய அனைவரும் மனப்பூர்வமாக ஈடுபட்டனர். அப்பா சிவாஜி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த கட்சியாக இருக்கட்டும். அத்தனை பேரும் சிவாஜி மேல் அன்பு கொண்டவர்கள். முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை போனில் கூப்பிட்டு உன் பெரியப்பா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. என்னை மன்னிச்சுடு என்று சொன்னார்.

விழாவுக்கு துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பார்கள் என்றார். புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழா நடைபெறும் இத்தருணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைத்து அம்மா கனவும் நினைவாகி உள்ளது. அப்பா சிவாஜி மீது எல்லோருக்கும் அளவு கடந்த அன்பு உண்டு. நான் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்டு உள்ளேன். அவரும் அன்பாக பழகுவார். இதே போல் ஒவ்வொருவரும் இனிமையாக பழக கூடியவர்கள். அனைவரும் விழாவுக்கு வந்தது மகிழ்ச்சி தருகிறது. கருணாநிதி திறந்து வைத்த சிவாஜி சிலை மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே சிவாஜியின் சிலை பீடத்தில் கலைஞர் கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்திலாவது வையுங்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com