நடிகர் ரஜினிகாந்த் கருத்து : அதிமுகவின் நாளேடு நமது அம்மா வரவேற்பு

மோடிக்கு எதிரான அலை, தமிழகத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா வரவேற்றுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கருத்து : அதிமுகவின் நாளேடு நமது அம்மா வரவேற்பு
Published on

சென்னை,

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, பிரதமர் மோடி எனும் தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி என புகழாரம் சூட்டினார். அதே வேளையில், தமிழகத்தில் மோடியின் எதிர்ப்பலை காரணமாகவே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதாகவும் ரஜினி தெரிவித்தார். இந்நிலையில் ரஜினிகாந்தின் கருத்தை, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா வரவேற்றுள்ளது.

நீட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரசாரத்தின் காரணமாகவே, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியை தழுவியதாகவும் நமது அம்மா நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் கல்வி முறையால் மாணவர்களுக்கு கிடைக்கும் நியாயமான பலன்கள் முற்றிலுமாக மறைக்கப்பட்டதால் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கோவத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியதாகவும் விமர்சித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை ஒப்பந்தம் போட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தது, அன்றைய திமுக காங்கிரஸ் கூட்டணிதான் என்பது மறைக்கப்பட்டதாகவும் நமது அம்மா நாளேட்டில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே, தேசமே மோடிக்கு ஆதரவை வழங்கிய சூழலில், தமிழகத்தில் வெற்றி வசப்படாமல் போனதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிப்பதில், அதிமுக-பாஜக கூட்டணி பின்தங்கி விட்டது என்பதையே ரஜினிகாந்தின் கருத்து உணர்த்துவதாகவும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது. உள்நோக்கமற்ற காலாவின் கருத்தை உள்வாங்கி, குறைகளை நிறைகளாக்கி 2021-ம் ஆண்டில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நமது அம்மா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com