வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர்

வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புசெழியனின் ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர்
Published on

சென்னை,

நடிகர் விஜய், பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்பு என்கிற அன்புசெழியன் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் 3 நாட்களுக்குள் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முதல் நாளான நேற்று முன்தினம் நடிகர் விஜய் உள்பட யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர்கள் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை நடிகர் விஜய் மற்றும் அன்புசெழியனின் ஆடிட்டர்கள் வருமான வரி துறை புலனாய்வு அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர்.

கடைசி நாளான இன்று (புதன்கிழமை) நடிகர் விஜய், கல்பாத்தி எஸ்.அகோரம், அன்புசெழியன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com