

சென்னை,
நடிகர் விஜய் 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசுகாரை இறக்குமதி செய்தார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்தது
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது.
ஆனால், நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என்றும் அபராதத்தொகையை ரத்துசெய்யவேண்டும் என்றும், விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் அபராதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கினை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். அபராதத்தை வசூலிப்பது தொடர்பான எவ்வித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல்களின் இதே போன்ற பிற வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.