

சென்னை,
லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சண்டகோழி-2 படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் சென்னையில் நேற்று பேட்டி அளித்தனர்.
அப்போது விஷால் கூறியதாவது:-
நடிகர் கருணாசை போலீசார் கைது செய்துள்ளனர். பேச்சு சுதந்திரம் ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அந்த எல்லையை அவர் தாண்டியதால் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்ற ரீதியில் தான் இதை நான் பார்க்கிறேன். கருணாசை கைது செய்தது தவறல்ல. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோருக்கும் இது பொருந்தும்.
நான் எல்லை தாண்டி தரக்குறைவாக பேசினால் கூட என்னை கைது செய்யாவிட்டால் நீங்கள் கண்டிப்பாக கேட்பீர்கள்.
நடிகை ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த படத்தில் அவர் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள். அவர் பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைத்து இருப்பார். நிச்சயம் அவருக்கு படத்தில் பாதுகாப்பு இருக்கும்.
திருட்டு வி.சி.டியை ஒழிக்க போராடுகிறோம். சைபர் கிரைம் நினைத்தால் ஒரே நாளில் திருட்டு வி.சி.டி.யை ஒழித்து கட்டலாம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேதி அறிவித்த பிறகு முடிவு செய்வேன்.
நான் 24 படங்களில் நடித்து விட்டேன். சண்டகோழி-2 எனது 25-வது படம். இதன் முதல் பாகம் கதையை சூர்யாவை மனதில் வைத்து லிங்குசாமி உருவாக்கினார். ஆனால் அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் எனக்கு அதிரடி கதாநாயகன் இமேஜை பெற்று தந்தது. தாவணி போட்ட தீபாவளி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
சண்டகோழி இரண்டாம் பாகமும் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய படமாக இருக்கும். இதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருக்கிறார். நடிகையர் திலகம் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும். ஆயுத பூஜைக்கு சண்டகோழி-2 திரைக்கு வரும்.
இவ்வாறு விஷால் கூறினார்.