பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை கவுதமி அ.தி.மு.க.வில் இணைந்தார்

மக்களுக்காக பணி செய்ய சரியான இடம் அ.தி.மு.க.தான் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக கவுதமி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை கவுதமி அ.தி.மு.க.வில் இணைந்தார்
Published on

சென்னை,

பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் தனக்கு கட்சியில் ஆதரவு இல்லை எனக்கூறி, நடிகை கவுதமி அக்கட்சியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் விலகினார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கவுதமி இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மக்களுக்காக பணி செய்வதற்கு சரியான இடம் அ.தி.மு.க.தான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் இருந்த நான், சில நாட்களுக்கு முன்பு ஒருசில காரணங்களுக்காக அக்கட்சியில் இருந்து விலகினேன்.

ஆனால் நல்ல காரணங்களுக்காகவும், சரியான காரணங்களுக்காகவும், சரியான நேரத்தில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நான் இறங்கி வேலை செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியும். இதுவரை அரசியலில் எனது செயல்பாடு அவ்வாறுதான் இருந்துள்ளது. இனிமேல் இன்னும் தீவிரமாக பணியாற்றுவதற்கு ஒரு சரியான இடம் எனக்கு கிடைத்துள்ளது என நம்புகிறேன்."

இவ்வாறு நடிகை கவுதமி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com