பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் 90-ஸ்களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நடிகை கஸ்தூரி. தற்போது தமிழ். தெலுங்கு மொழி படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கஸ்தூரி அவ்வப்போது சினிமா மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நடிகை திருமதி.க ஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர்.
சமூக செயல்பாட்டாளரான திருமதி.கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழ்நாடு பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






