

சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடிகை சுபாஷினி வசித்துவந்தார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் படப்பிடிப்பு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து தங்கியுள்ளார். அங்கிருந்தபடி ஷூட்டிங்கிற்கு சென்று வந்த சுபாஷினி நேற்று இரவு திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நடிகை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நடிகை சுபாஷினி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் கணவருடன் வீடியோ காலில் பேசிய பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த நடிகை சுபாஷினி ஷூட்டிங்கிற்காக வந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சுபாஷினி ‘கயல்’ என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த சுபாஷினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களை சோகம் அடைய வைத்துள்ளது.