தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் விலங்குகள் நலவாரியம் சேர்ப்பு- "நாய்க்கடியால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு" என நீதிபதிகள் கவலை

தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் விலங்குகள் நலவாரியம் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது. நாய்க்கடியால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் விலங்குகள் நலவாரியம் சேர்ப்பு- "நாய்க்கடியால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு" என நீதிபதிகள் கவலை
Published on

தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் விலங்குகள் நலவாரியம் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது. நாய்க்கடியால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

தெருநாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்த செந்தில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்களில் பெரும்பாலானவை ரேபிஸ் உள்ளிட்ட தொற்றுகளுக்கு ஆளாகி உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் குழந்தைகள், மாணவ-மாணவிகள், பெண்கள், முதியவர்களை கடிக்கின்றன..

இதனால் பலர் தங்களின் வீட்டை விட்டு வெளியே நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நாய்க்கடிக்கு முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் மக்கள் இறக்கவும் நேரிடும்..

கட்டுப்படுத்த வேண்டும்

வீடுகளில் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து பின்னர் தெருக்களில் விட்டுவிடுகின்றனர். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் எங்கள் பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 2,245 பேர் நாய்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, தெருநாய்களை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் கவலை

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "தெருநாய்கள் கடிப்பதால், இங்கு மட்டுமல்ல அனைத்து இடங்களிலுமே மக்கள் பாதிக்கப்படுகின்றனர்" என கவலை தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் உரிய பதில் அளிக்கும்படியும், இந்த வழக்கில் விலங்குகள் நல வாரியத்தை எதிர்மனுதாரராக சேர்க்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com