

சென்னை,
கன்னியாகுமரி, நெல்லையில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ராவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்னியாகுமரி - ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா இடையே இயக்கப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்கள்: 16317/16318) கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 19-ந் தேதி முதலும், கட்ராவில் இருந்து ஜூன் 22-ந் தேதி முதலும் இந்த கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.
இதேபோல், திருநெல்வேலி (நெல்லை) - ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கட்ரா இடையே இயக்கப்படும் நவ்யுக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16787/16788) கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து ஜூன் 15 (நேற்று) முதலும், கட்ராவில் இருந்து ஜூன் 18-ந் தேதி முதலும் இந்த கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.