ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பஸ்கள்? அதிகாரிகள் ஆலோசனை

கூடுதலாக இயக்கப்படும் பஸ்களை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பஸ்
Published on: 

சென்னை,

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

ஆலோசனை கூட்டம்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் சென்று திரும்பும் வகையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பஸ் நிலையங்கள்

கூட்டத்தில், பண்டிகை காலத்தில் இயக்கப்பட உள்ள சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை, ஆம்னி பஸ்களின் இயக்கம், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், விடுமுறை நாட்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பது, கூடுதலாக இயக்கப்படும் பஸ்களை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பொதுமக்கள் பண்டிகை கால விடுமுறையின் போது எவ்வித இடையூறும் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், தாம்பரம் போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் பிரபாகர், கிளாம்பாக்கம் பஸ் முனைய முதன்மை நிர்வாக அலுவலர் மாலதி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் குணசேகரன், மாநகர போக்குவரத்துக்கழக இணை மேலாண்மை இயக்குனர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com