எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்

மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கபப்டுகின்றன.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. 45 நாட்களுக்கு தற்காலிகமாக மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். ஆனாலும் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது.

குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. தலைமைச் செயலகம் வழியாக 8 பஸ்கள், நுங்கம்பாக்கம் வழியாக 5 பஸ்கள், ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 27 பஸ்கள், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பஸ்கள் என மொத்தம் 60 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இது தவிர எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக பஸ்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது. தீவுத்திடல், ராயபுரத்தில் இருந்து புறப்படக்கூடிய பஸ்கள் சென்ட்ரல், தலைமை செயலகம், சிந்தாதிரிப்பேட்டை வழியாக எழும்பூர் நிலையம் சென்று அங்கிருந்து அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com