அமெரிக்க சர்வதேச பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை தரமணியில் உள்ள அமெரிக்க சர்வதேச பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அமெரிக்க சர்வதேச பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்:- தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் காலியிடத்துக்கு 4,600 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. எம்.பி.ஏ. படித்த பட்டதாரிகள் கூட துப்புரவு பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களில் 3 கோடியே 30 லட்சம் பேர் பணியில் உள்ளனர். ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக் காக காத்திருக்கின்றனர். தமிழக அரசுப் பணியில் 16 லட்சம் பேர் உள்ளனர். அரசு வருமானத்தில் 60 சதவீதம் அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. அதனால் தான் அரசு வேலையை பெற ஆர்வம் காட்டுகிறார்கள்.

தற்போது, மத்திய அரசு பயோ-மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், அதை செயல்படுத்துவதில் நிறைய தவறு நடக்கிறது.

அமைச்சர் காமராஜ்:- நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பயோ-மெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த முறை செயல்படுத்தப்படவில்லை. அதை செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதை செயல்படுத்தப்படும்போது, ரேஷன் பொருட் கள் பயனாளிகள் அனைவரையும் சென்றடையும்.

பழனிவேல் தியாகராஜன்:- சென்னை தரமணியில் உள்ள அமெரிக்க சர்வதேச பள்ளிக்கு 12 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காகவே இந்த பள்ளி தொடங்கப்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்தப் பள்ளிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அதன் சொத்து மதிப்பு ரூ.800 கோடியாகும். பள்ளியில் சேரும்போது ரூ.28 லட்சம் கட்டணம் வசூலிக்கிறார்கள். பிறகு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், வெளிநாட்டு குழந்தைகள் நிறைய பேர் இப்போது அந்தப் பள்ளியில் படிப்பதில்லை. ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் காலி இடங்களை நிரப்புவதற்காக இந்திய குழந்தைகளை சேர்த்துக்கொள்கின்றனர். அரசு வழங்கிய அனுமதியும், நிலமும் எந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- அந்த பள்ளி தொடங்க எந்த விதிமுறையின் கீழ் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- பொதுவாக, அரசு வழங்கிய நிலத்தை மாறுபட்டு பயன்படுத்தினால் அதை அரசு மீண்டும் எடுத்துக்கொள்ள முடியும். அப்போது போடப்பட்ட அரசாணையை பார்த்துவிட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- இதேபோன்ற பிரச்சினையை ஏற்கனவே நான் கொண்டு வந்திருக்கிறேன். மருத்துவ துறைக்கு அரசு வழங்கிய நிலத்தில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்:- திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இடம் தி.மு.க. ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டது. மருத்துவ துறைக்காகத்தான் அந்த இடம் வழங்கப்பட்டது. விரைவில் அதுகுறித்து தெரிவிக்கப்படும்.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- தரமணியில் உள்ள அமெரிக்க சர்வதேச பள்ளி தொடர்பான பிரச்சினை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குறைபாடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com