

சென்னை,
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த மையத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை நடவடிக்கைகளையும், செல்லப்பிராணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மையத்தில் சராசரியாக 35 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சராசரியாக 25 செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1 லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் தீவிர சிறப்பு முகாம் வாயிலாக 15 மண்டலங்களிலும் இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட 71 ஆயிரத்து 388 செல்லப் பிராணிகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக புளியந்தோப்பு, லாய்ட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், மணலி மண்டலத்தில் செட்டிமேடு, திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மண்டத்தில் செட்டிமேடு, கண்ணப்பர்திடல் ஆகிய 10 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் அத்திப்பட்டு, நந்தம்பாக்கம், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் பயோ சி.என்.ஜி. பிளான்ட் பகுதி என 4 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருங்குடியில் உள்ள நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் தற்காலிகமாக நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கான காப்பகமாக செயல்பட்டு வருகிறது. மணலி மற்றும் பெருங்குடியில் நோயினால் பாதிக்கப்பட்ட தலா 250 நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், புளியந்தோப்பு மற்றும் லாய்ட்ஸ் காலனி ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நடைபெற்று வருகின்ற 4 நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையத்தின் பணிகளையும் விரைந்து முடித்திடவும்,தெரு நாய்களை கட்டுப்படுத்துகின்ற வகையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 350 முதல் 400 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், அனைத்து தெரு நாய்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசியினை செலுத்தி 100 சதவீதம் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளததை உறுதி செய்திடவும் செல்லப் பிராணிகளுக்கான உரிமங்களை விரைந்து வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சமீரன், இணை கமிஷனர்கள் ஜெயசீலன் (சுகாதாரம்), சரவணன் (பணிகள்), மத்திய வட்டார துணை கமிஷனர் கௌஷிக், தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.