சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் - இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 2-வது இடம்

சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால கூடுதல் கடன் வழங்கும் திட்டத்தில் அதிக கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் - இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 2-வது இடம்
Published on

சென்னை,

இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய இடம் பிடிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான். வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் மிகப்பெரிய பங்களிப்பை அவை அளிக்கின்றன.

ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்த தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவற்றை தாங்கிப்பிடிக்கும் நோக்கத்தில், அவசர கால கடன் உதவி உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

அதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொகுப்பாக ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்துகொள்ள, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

இந்த திட்டத்தின்படி, வங்கிகள் மூலம் அவசர கால கூடுதல் கடன் பெறுவதற்கு கூடுதல் பிணைகள் கேட்கப்படுவதில்லை. தகுதி வாய்ந்த அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் கூடுதல் கடனை விரைவாக வழங்க வேண்டும் என்று வங்கிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் இந்த திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கடந்த 18-ந் தேதியளவில், ரூ.1.5 லட்சம் கோடி கடனை அனுமதித்துள்ளன. அதில் இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.1 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது

பொதுத்துறை வங்கிகள் ரூ.76 ஆயிரத்து 44.44 கோடி கடனுதவியை அனுமதித்துள்ளன. அதில் ரூ.56 ஆயிரத்து 483.41 கோடி ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தனியார் வங்கிகள் அனுமதித்துள்ள ரூ.74 ஆயிரத்து 715.02 கோடி கடனுதவியில், ரூ.45 ஆயிரத்து 762.36 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு விட்டது.

அவசர கடன் உதவி திட்டத்தின் கீழ், மாநிலம் வாரியாக பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை அதிகபட்சமாக மராட்டியத்தில் ரூ.6 ஆயிரத்து 7.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 95 தொழில் நிறுவனங்கள் ரூ.5 ஆயிரத்து 693.71 கோடி கடன் பெற்றுள்ளன. உத்தரபிரதேசத்தில் ரூ.5 ஆயிரத்து 554.08 கோடி கடனும், குஜராத்தில் ரூ.5 ஆயிரத்து 150.69 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com