

சென்னை,
தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் 23.4.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே 297 தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், எனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, பல்வேறு தரப்பட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று, பின்வரும் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன.
298. கழக ஆட்சி அமைந்தவுடன், மா விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
299. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் 'அத்துக்கட்டு' பண்டிகையை, பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும்.
300. கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, கட்டடத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
301. பனைத் தொழிலாளர்கள், பனை மரம் ஏறி தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
302. அரசு கேபிள் டி.வி. கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும்.
303. கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அதிக அளவிலான பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, சிறிய அளவிலான முந்திரி உடைக்கும் கை கருவி விலையில்லாமல் வழங்கப்படும்.
304. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கண்காணிக்க 24/7 War Room மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்படும்.
305. மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக, தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
306. இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால், ஒற்றைச் சாளர முறையில் (Single Window System) 30 நாட்களில் உரிமம் வழங்கப்படுவதுடன், அதற்காக வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
307. பணிக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு, 'அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ்' இருசக்கர வாகனம் வாங்க ரூ. 10,000/- மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.