

சென்னை,
த.வெ.க. தேர்தல் மேலான்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
“வாக்குப்பதிவு நாளன்று துறைமுகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக்குமாரை, வாக்குச்சாவடி அருகிலேயே, அமைச்சர் சேகர்பாபு மிரட்டிய வீடியோ காட்சிகளை மக்கள் பார்த்தனர். சைதாப்பேட்டையில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தி.மு.க.வினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் த.வெ.க. வேட்பாளர் ரமேஷின் அலுவலகம் எரிக்கப்பட்டது. த.வெ.க. தலைவர் விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. தோல்வி பயத்தில் தி.மு.க.வினர் எங்கள் வேட்பாளர்களை அச்சுறுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிப்பணியாமல், மக்களோடு சேர்ந்து எங்களுடைய பணியை செய்து வருகிறோம்.
இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்தோம். அவரிடம் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். தமிழகத்தில் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களிலும், வாக்கு எண்ணும் ஏஜென்ட்டுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் பாதுகாப்பு போடப்பட வேண்டும்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகே, உதாரணமாக லயோலா கல்லூரி போன்ற இடங்களில் கட்சிக்காரர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வரை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, திங்கட்கிழமையன்று பொதுமக்களுக்கு இடையூறு, அல்லது சட்ட ஒழங்கு பிரச்சினை எதுவும் வந்துவிடக்கூடாது.
எனவே, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளிய சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு கட்சிக்காரர்களுடைய நிர்வாகிகளோ, தொண்டர்களோ வருவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து கட்சிகளின் தொண்டர்களோ, நிர்வாகிகளோ, யாருமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு பக்கத்தில் இருக்கக்கூடாது என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மாலை 6 மணிக்கு மேல வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அந்தந்த கட்சியின் தொண்டர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடலாம். வாக்கு எண்ணும் பணி நேர்மையான முறையில், எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
அதோடு, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும்போதும், அப்பொழுதே முடிவை அறிவிக்க வேண்டும் எனவும், கடைசி சுற்று முடிவில் அறிவிக்க கூடாது என்றும் கேட்டிருக்கிறோம். அதற்கு, இதுவரை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கும் நடைமுறையை பின்பற்றுவோம் என அர்ச்சனா பட்நாயக் உறுதியளித்துள்ளார்.
மேலும், தபால் வாக்குகளை லெட்ஜர் இல்லாமல் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். லெட்ஜர் நகலில் இருக்கும் தபால் வாக்குகளை மட்டுமே கணக்கில் எடுத்து எண்ணப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.