வெளி மாநிலம் செல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு - உதயநிதி ஸ்டாலின்

தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 - 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வாக்கு வாதத்தின் போது நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியதாக கூறப்படுகிறது. கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக கபடி வீராங்கனைகள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளதாவது;
தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். தமிழக கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். பஞ்சாப் அரசு அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு புள்ளிகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று இரவே தமிழக வீராங்கனைகள் பஞ்சாப்பில் இருந்து டெல்லி அழைத்துவரப்படுவார்கள். வெளி மாநிலம் செல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்.






