

சென்னை,
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை 'விபச்சாரிகள்' என்று வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜ்ஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.
எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?
இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுக-வுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?
கண்ணியத்திற்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அநாகரீக அரசியலின் உச்சமாக தமிழக பெண்களை 'விபச்சாரிகள்' என்று மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.