

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது.
தலா 2 இடங்களை வைத்து இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தவெக கூட்டணியின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய் கடிதம் வழங்கினார். ஆனால், ‘ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்தார்.
மூன்று முறை கவர்னரை விஜய் சந்தித்து விட்ட நிலையில் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை இதற்கிடையே விசிகவின் நிலைப்பாடு இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த தமிழ்நாடும் விசிகவின் நிலைப்பாடு என்ன? என்பதை பரபரப்புடன் கவனித்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவனை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்பட்டாலும் இது குறித்த புகைப்படமோ அதிகாரப்பூர்வ அறிவிப்போ இதுவரை வெளியாகவில்லை.