கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதால் வாக்குப்பதிவுக்கு அதிக நேரம் ஆனது - வாக்குச்சாவடி அலுவலர்கள் தகவல்

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றியது, 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாடு காரணங்களால் வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்ளப்பட்டது என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறினார்கள்.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதால் வாக்குப்பதிவுக்கு அதிக நேரம் ஆனது - வாக்குச்சாவடி அலுவலர்கள் தகவல்
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும், வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர். அத்துடன் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வலது கைக்கு ஒரு உறை வழங்கப்பட்டது. தொடர்ந்து வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தால் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த அளவை விட அதிகமாக உடல் வெப்பம் இருப்பவர்களை, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று தனியாக இரவு 6 மணி முதல் 7 மணி வரை ஓட்டுபோட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் வந்து ஓட்டுபோடவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருந்ததால் ஓட்டுப்பதிவுக்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.

அதேபோல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர்கள் மட்டுமே இடம் பெற வசதி உள்ளது. அந்தவகையில் தென்சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளில் தியாகராயநகரில் மட்டும் 14 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரே ஒரு எந்திரம் மட்டும் அமைக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் 23 வேட்பாளர்கள், விருகம்பாக்கம் 27, சைதாப்பேட்டை 30, வேளச்சேரி 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களின் பெயர்களை தேடுவதற்கு சிறிது நேரம் எடுத்து கொண்டனர். இதனால் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ள வாக்குச்சாவடிகளை விட, இரண்டு எந்திரம் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்கு சற்று அதிக நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.

அதேபோல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த எந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகி உள்ளதா? என்பதை சரிபார்க்க உதவியது. வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு ஓட்டை பதிவு செய்தபின், இந்த எந்திரம் ஒப்புகைச்சீட்டு ஒன்றை காட்டியது. அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம் பெற்றிருந்தது. அந்த ஒப்புகைச் சீட்டு 7 வினாடிகளுக்கு மட்டுமே பார்க்க முடிந்தது. வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. இருந்தாலும் வாக்குப்பதிவுக்கு 12 மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் அனைவரும் வாக்களிக்க முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com