ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி - பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி பெற்று பயன்பெற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி - பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
Published on

தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனநீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 29 தனிப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்து கொடுக்க இலக்கு ஒதுக்கீடு பெறப்பட்டு இந்த திட்டத்திற்காக இதுவரை விவசாயிகளை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்ட வழிகாட்டுதலின்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் அருகில் உள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

அரசு வெளியிட்ட ஆணையின்படி, 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும் 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ, 3 லட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்ப் செட்டுகள் அமைப்பதற்கு ரூ, 75 ஆயிரமும், நீர் வினியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ, 20 ஆயிரமும் உச்ச வரம்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புகளுக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ, 2 லட்சத்து 50 ஆயிரமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட அழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்ப்செட்டுகள் நிறுவவேண்டும் என்றாலோ அதற்கான கூடுதல் செலவை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெரிய விவசாயிகளை போல சிறு மற்றும் குறு ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளான்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

மேற்கண்ட திட்டங்களின் மூலம் காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சீபுரம், -631 502 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com