பா.ஜனதா நிர்வாகியுடன் அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோவால் சர்ச்சை

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்ச அரசியல் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அக்கட்சி நிர்வாகியுடன் பேசியதாக ஆடியோ பரவி வருகிறது. மிமிக்ரி செய்து அந்த ஆடியோ வெளியிடப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசில் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா நிர்வாகியுடன் அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோவால் சர்ச்சை
Published on

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்ச அரசியல் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அக்கட்சி நிர்வாகியுடன் பேசியதாக ஆடியோ பரவி வருகிறது. மிமிக்ரி செய்து அந்த ஆடியோ வெளியிடப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசில் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரவும் ஆடியோ

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவவீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் கடந்த 13-ந் தேதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வெளியே வரும்போது அவரது கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியினர் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இதுபற்றி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகியோர் போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில் செருப்பு வீச்சு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை பேசியதாக உரையாடல் இடம்பெற்றுள்ளது.

சைபர் கிரைம் போலீசில் புகார்

அண்ணாமலை மற்றும் சுசீந்திரன் பேசுவது போன்று மிமிக்ரி செய்து அந்த ஆடியோவை வெளியிட்டு உள்ளதாகவும், அவர்கள் 2 பேருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் முன்னாள் மதுர மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்தான் இந்த ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் என்றும் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் சுசீந்திரன் கூறி இருப்பதாவது:-

நானும், எங்கள் கட்சி மாநில தலைவரும் பேசியதாக டப்பிங், மிமிக்ரி, எடிட்டிங் போன்றவை எல்லாம் செய்து, அதனை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி, அதை விவாதமாக்கி, என் மீதும், மாநில தலைவர் மீதும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கெட்ட நோக்கத்தில் பொய்யான தகவலை பரப்பி உள்ளனர்.

அதாவது, கடந்த 13-ந் தேதி ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பகல் 11.30 மணி அளவில், மதுரை ரிங் ரோடு பகுதிக்கு வந்தபோது நான் அவரை வரவேற்றேன். என்னை அவர் காரில் ஏற்றிக்கொள்ள, மதுரை விமானநிலையம் நோக்கி சென்றோம். காரில் மாநில தலைவரின் உதவியாளர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.

மிஸ்டுகால்

அப்போது டாக்டர் சரவணன் தனது போனில் இருந்து மாநில தலைவர் அண்ணாமலையின் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். உடனே அவர், தனது உதவியாளர் போனில் இருந்து டாக்டர் சரவணனுக்கு போன் செய்து என்ன விவரம்? என்று கேட்க சொன்னார். அதன்படி போனை ஸ்பீக்கரில் போட்டு அண்ணாமலை பேசியபோது, டாக்டர் சரவணன் கட்சி நிர்வாகிகளுடன் மதுரை விமான நிலையம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும், விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னை நோக்கியும், பொதுமக்களை பார்த்தும் உங்களை யார் அனுமதித்தது...? வெளியே போங்க... என்று சொன்னதாகவும், எங்கள் மாநில தலைவர் வருகிறார் என்று சொல்லியதற்கு, உடனே அமைச்சர் அவருக்கு யார் அனுமதி கொடுத்தது? அனுமதி கிடையாது? என்று கூறியதாகவும் டாக்டர் சரவணன் தெரிவித்தார்.

பதிலுக்கு அண்ணாமலை, அப்படினா நீங்களே அஞ்சலி செலுத்துங்கண்ணா..., அமைச்சருக்கு நிகரா மாவட்ட தலைவர் அஞ்சலி செலுத்தியதாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு போனை ஆப் செய்யாமல் என்னிடம் புறநகருக்கு சென்றுவிடுவோம், என்றார்.

லட்சுமணன் வீடு எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது? என்று கேட்டார். நான் 12 கிலோ மீட்டா தூரம் என்று கூறினேன். அங்கு கட்சி ஆட்கள் 500-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள், என்றும் அண்ணாமலையிடம் கூறினேன்..

உடனே போனில் இருந்த டாக்டர் சரவணன், "வேண்டாம் அண்ணா... நான் அனுமதி வாங்கிவிட்டேன்... அரசு சார்பில் மரியாதை செலுத்திவிட்டார்கள். நீங்கள் இங்கு வந்தவுடன் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுவிடலாம்" என்று அழைத்தார்.

அதற்கு மாநில தலைவர், "அமைச்சர் தியாகராஜனின் பொய்யான முகத்திரையை மக்களிடம் கூறி வேற லெவல் அரசியல் பண்ணுவோம்" என்று கூறினார்.

பின்னர் அண்ணாமலையும், நானும் விமான நிலையம் சென்று அஞ்சலி செலுத்தினோம். வெளியே என்ன நடந்தது? என்று எங்களுக்கு தெரியாது.

உண்மைக்கு புறம்பானது

வெளியே நாங்கள் வரும்போது எதுவும் நடக்கவில்லை, நான் அண்ணாமலையை சிவகங்கைக்கு வழிஅனுப்பிவிட்டு வந்து விட்டேன். எந்த ஒரு இடத்திலும் நானும் மாநில தலைவரும் போனில் உரையாடவில்லை. நான் அவருடன் செல்லும்போது போனில் பேசியதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது.

எனவே அவரை அசிங்கப்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் வேண்டும் என்றே மேற்படி உரையாடலை திரித்து சமூகவலைத்தளத்தில் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்துள்ளனர். எனவே டாக்டர் சரவணன் போன் விவரங்களை முழுமையாக ஆராய்ந்து, விசாரணை செய்தால் உண்மை வெளிவரும். இதில் தொடர்புடைய அவரது ஆட்கள் மற்றும் இணையதளத்தில் அவதூறு பரப்பியவர்கள், சதி செய்தவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com