

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில், 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வுடன் கடந்த வாரம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவ- மாணவிகளுக்காக இறுதிகட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
இதில் முதல் நாள் அனைத்து இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான பி.சி. பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 9.30 மணிக்கு பி.எஸ்சி., பி.சி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த எம்.பி.சி. மாணவர்களுக்கும் (கட்ஆப் மதிப்பெண் 399 முதல் 240 வரை), மதியம் 2 மணிக்கு பி.ஏ., பி.காம். பாடப்பிரிவுக்கும் (கட்ஆப் மதிப்பெண் 399 முதல் 200 வரை) கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையிலான சேர்க்கை குழுவினர், இக்கலந்தாய்வை நடத்தி மாணவ- மாணவிகளை சேர்க்கை செய்தனர். தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பி.எஸ்சி., பி.சி.ஏ. பாடங்களுக்கு விண்ணப்பித்த எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும் (கட்ஆப் மதிப்பெண் 399 முதல் 240 வரை), மதியம் 2 மணிக்கு பி.ஏ., பி.காம். பாடங்களுக்கு விண்ணப்பித்த எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும் (கட்ஆப் மதிப்பெண் 399 முதல் 200 வரை), நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு எஞ்சியுள்ள இடங்களுக்கு தகுதியான அனைத்துப்பிரிவு மாணவர்களுக்கும் (குறுஞ்செய்தி பெற்றவர்கள் மட்டும்) கலந்தாய்வு நடக்கிறது.