விஜயதசமியையொட்டி கோவில்களில் “வித்யாரம்பம்” நிகழ்ச்சி பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்தது

விஜயதசமியையொட்டி கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.
விஜயதசமியையொட்டி கோவில்களில் “வித்யாரம்பம்” நிகழ்ச்சி பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்தது
Published on

சென்னை,

நவராத்திரியின் நிறைவு நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று தொடங்கப்படும் எந்த நிகழ்வுகளும் சிறந்ததாக அமையும் என்பது மக்கள் நம்பிக்கையாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக விஜயதசமியையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

விஜயதசமி தினத்தன்று குழந்தைகளின் கல்வியை தொடங்குவதே சிறந்தது என்பதற்காக இந்த நிகழ்ச்சி கோவில்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, கோவில்களில் இந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் கோவில்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து காத்திருந்தனர்.

அரிசியில் எழுதுதல்

இந்த நாளில் குழந்தைகளின் நாவில் தேன் தடவி தங்க ஊசியால் எழுத்தால் எழுதுவார்கள். அந்தவகையில் கோவில்களில் இந்த நிகழ்வுகள் நடந்தது. மேலும், பெற்றோர் மடியில் குழந்தையை அமர வைத்து, தாம்பூலம் தட்டில் அரிசியில் தாய் மொழியின் முதல் எழுத்தை குழந்தையின் சுட்டு விரலை பிடித்து கோவில் அர்ச்சகர்கள் எழுத வைத்தனர்.

இதுதவிர சில கோவில்களில் தங்க மோதிரத்தால் குழந்தையின் நாவில் தாய்மொழியின் முதல் எழுத்தை எழுதும் நிகழ்வுகளும் நடந்தன. கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

மாணவர் சேர்க்கை

கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கையோடு, அப்படியே தங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பார்கள். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த மாணவர் சேர்க்கை பெருமளவில் குறைந்து காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு மத்தியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இதற்காக சில பள்ளிகளில் சிறப்பான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. முதல் நாளில் பள்ளிக்கு வந்த குழந்தைகளின் விவரங்களை பெற்றுக்கொண்டு, ஆசிரியர்கள் தங்கள் மடியில் அமர வைத்து அரிசியில் தாய்மொழியின் முதல் எழுத்துகளை எழுத வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com