

சென்னை,
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்து இருக்கும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நேற்று வெளியிடப்பட்டது. கட்-ஆப் மதிப்பெண்ணின்போது ஒரே மதிப்பெண்ணை பல மாணவர்கள் பெறுகையில், யாருக்கு முதல் உரிமை கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதற்காக பயன்படுத்தப்படும். ஆனால் ரேண்டம் எண் பயன்படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் தேர்வில் பெற்ற மதிப்பெண் பார்க்கப்படும். அதிலும் சமமாக இருக்குமானால், பிறந்ததேதி பார்க்கப்படும். அவற்றிலும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த ரேண்டம் எண் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்த ரேண்டம் எண்ணை நேற்று வெளியிட்டார். அப்போது உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் விவேகானந்தன், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (டி.என்.இ.ஏ.) செயலாளர் புருசோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின்னர், அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்து இருந்தனர். அதன்தொடர்ச்சியாக தற்போது சம வாய்ப்பு எண் (ரேண்டம்) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதியுடன் நிறைவுபெறும். அதேபோல், விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்வதற்கு ஏதுவாக சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 6 மண்டலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் 26-ந்தேதி(நேற்று) முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நேரில் சென்று சான்றிதழை சமர்ப்பித்து, சரிபார்த்துக்கொள்ளலாம்.
அதனைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் அடுத்தமாதம் 17-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே 7-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு அறிவிப்பு இருக்கின்ற காரணத்தால் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதன்பின்னர், மாணவர் சேர்க்கைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கலந்தாய்வு நடத்தப்படும்.
கடந்த ஆண்டு 480 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 458 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இந்த ஆண்டு கல்விக்கட்டணம் உயர வாய்ப்பு இல்லை.
முதுநிலை படிக்க இருக்கும் மாணவர்கள், இளநிலை இறுதி பருவத்தேர்வு மதிப்பெண்ணை தவிர, மற்ற பருவத்தேர்வு மதிப்பெண்ணை வைத்து பதிவு செய்து கொள்ளலாம். நீதிமன்ற வழக்கு முடிந்ததும் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு தெரியவரும். அதைவைத்து அவர்கள் முதுநிலை படிப்புகளில் சேர்ந்துகொள்ளலாம்.
புதிய கல்விக்கொள்கை குறித்து ஆலோசிக்க உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் அரசின் மூலம் மேற்கொள்ளப்படும். புதிய கல்விக்கொள்கையில் உயர்கல்வித்துறையில் கூறப்பட்டு இருக்கும் இலக்குகளை நாம் ஏற்கனவே தமிழகத்தில் அடைந்து விட்டோம்.
உயர்கல்வித்துறையில் புதியகல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளவற்றில் தமிழ்நாட்டிற்கு எது உகந்ததாக இருக்கிறதோ? அதனை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். மற்றவற்றை எதிர்க்கவும் தயாராக உள்ளோம். அதில் ஏற்புடையது எது? ஏற்கமுடியாதது எது? என்பதை அந்தக்குழு ஆலோசித்து முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.