போதைப்பொருள் அதிகரித்து வருவதற்கு முந்தைய அ.தி.மு.க. அரசின் மீது பழிபோடுவதா? ஜெயக்குமார் கண்டனம்

‘போதைப்பொருள் அதிகரித்து வருவதற்கு முந்தைய அ.தி.மு.க. அரசின் மீது பழிபோடுவதா?’, என அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அதிகரித்து வருவதற்கு முந்தைய அ.தி.மு.க. அரசின் மீது பழிபோடுவதா? ஜெயக்குமார் கண்டனம்
Published on

சென்னை,

தமிழகத்தில் 100 சதவீதம் அளவு போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுதான் ஒரு முதல்-அமைச்சர் செய்யவேண்டிய வேலை. அவ்வப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கட்சியினர் தவறு செய்தால் நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன்' என்று சொல்கிறார். இது மட்டும் போதுமா?

அதனால் தி.மு.க.வினர் தவறு செய்யாமல் இருக்கிறார்களா? இப்போது கூட திருச்சியில் ஒரு தி.மு.க. பிரமுகர், தனக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக தனது மனைவியை அரிவாளைகொண்டு வெட்ட துரத்துகிறார். சர்வாதிகாரி இப்போது எங்கே போனார்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுக்க குட்டிசுவராகிவிட்டது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, கட்ட பஞ்சாயத்து சர்வ சாதாரணமாக இந்த ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

குடும்ப ஆதிக்கம்

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, யார் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து ஏரிகள், குளங்களை எல்லாம் தூர்வாரினார். ஆனால் இந்த ஆட்சியில் அதனை முறையாக செப்பனிடவில்லை. இதனால் மழைநீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலைதான் உள்ளது.

2006-11-ம் ஆண்டில் நடைபெற்ற செம்மொழி மாநாடு போல, தற்போது நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் தி.மு.க. குடும்ப ஆதிக்கம்தான் இருந்தது. சுற்றிலும் சர்க்கஸ் கம்பெனிபோல அவர்கள் குடும்பம்தான் இருக்கிறது. உதயநிதியை புகழ்பாடும் அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள். பொய்யை மட்டுமே மூலதனமாக்கி, பொய்யிலே ஆட்சி செய்து விளம்பரத்தின் மூலம் ஆட்சி செய்கின்ற விடியா அரசுதான் தி.மு.க. அரசு. இந்த மழையிலாவது உருப்படியாக ஏதாவது பணியைச் செய்தால் நல்லது.

இயலாமையை மறைக்க பழிபோடுவதா?

கடந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் போதைப்பொருட்கள் அதிகரிக்க காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தங்களது இயலாமையை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருட்களை கடத்துபவர்கள், சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள், கந்துவட்டி இப்படி எல்லோரையும் கைது செய்து, சட்டம் ஒழுங்கை பராமரித்து தமிழகத்தை அமைதி பூங்கா என்ற நிலை உருவாக்கப்பட்டது. காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டது. ஆனால் இன்றைக்கு காவல்துறை வெந்துபோய், நொந்துபோய் உள்ளது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தற்போது கூட்டத்தை கூட்டி வருகிறார். அதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வத்தையும், சசிகலாவையும் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன். எங்களுக்கு தொந்தரவு தராமல் போய்விட்டால் நல்லதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com