எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க. பலவீனம் அடைந்து வருகிறது -டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்தால் அ.தி.மு.க. பலவீனம் அடைந்து வருகிறது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க. பலவீனம் அடைந்து வருகிறது -டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

அ.ம.மு.க. 6-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

அப்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கு பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 70 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பலவீனம்

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆன உடன் அவர் ஜெயலலிதாவின் பாதையில் இருந்து விலகி தவறான பாதையில் சென்றதால்தான் வேறு வழி இல்லாமல் அ.ம.மு.க.வை உருவாக்கினோம்.

எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் நிரந்தரமாக கொடுக்கப்பட்டாலும் அது பலவீனம் அடைந்து வருகிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு வரக்கூடிய காலங்களில் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்பதுதான் எங்களின் 6-ம் ஆண்டு தொடக்க உறுதிமொழி ஆகும்.

அ.தி.மு.க. செயலற்று போகும்

தி.மு.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததற்கு முழு முதல் காரணமே எடப்பாடி பழனிசாமியின் சுயநலம்தான். பன்னீர்செல்வத்தை ஒதுக்கிவிட்டு செயல்பட்டதால்தான் மிகவும் பலவீனமாக ஆகிவிட்டார்கள். இதனால், இரட்டை இலையும், அ.தி.மு.க. என்ற இயக்கமும் செயலற்று போகும் நிலை வந்துவிடும்.

எடப்பாடி பழனிசாமியின் செயலற்ற தன்மையால்தான் தி.மு.க. பலம் வாய்ந்த கட்சி போன்ற ஒரு பிம்பம் எழுகிறது. எனவே, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணையும்போது கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார். அவரை வெளிப்படையாகவே சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com