அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: 10 மீனவர்களுக்கு ஆயுள் தண்டனை -கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 மீனவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: 10 மீனவர்களுக்கு ஆயுள் தண்டனை -கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Published on

கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

கடந்த 15.5.2018 அன்று காலை தேவனாம்பட்டினம் மீனவர்கள், சோனாங்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக் கொலை

பின்னர் இது, இரு மீனவ கிராம மீனவர்களிடையே மோதலாக மாறியது. இதில் கத்தி, அரிவாள், சுளுக்கி போன்ற பயங்கர ஆயதங்களுடன் மீனவர்கள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் சுளுக்கியால் குத்தியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

மேலும் சோனாங்குப்பத்தை சேர்ந்த பாண்டியன், முனியம்மாள், ஏலாயி, இளவரசன் ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

21 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சநாதன் மகன் பைந்தமிழ்குமரன் கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவனாம்பட்டினத்தை சேர்ந்த 21 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்த போதே தினகரன் என்பவர் இறந்து விட்டார்.

இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

10 பேருக்கு ஆயுள் தண்டனை

இதையொட்டி 20 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஆறுமுகம் (41), கந்தன் (40), சுரேந்தர் (38), ஓசைமணி (30), சரண்ராஜ் (46), சுதாகர் (46), சுப்பிரமணி (59), தென்னரசு (32), ஸ்டாலின் (70), முத்துக்குமார் (38) ஆகிய 10 மீனவர்களுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரகாஷ் தீர்ப்பு கூறினார்.

மற்ற 10 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com