தஞ்சை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை...!

அ.தி.மு.க. பிரமுகர் கொலை எதிரொலியாக திருக்காட்டுப்பள்ளி நகரில் பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.
தஞ்சை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை...!
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பிரபு அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.

தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பழமார்நேரி சாலை பகுதியில் பாரதிராஜா என்பவர் மீது நடைபெற்ற தாக்குதல் வழக்கில் இவரும் சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் பழமார்நேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் உட்கார்ந்து இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக பிரபுவை வெட்டினர். இதில் தலை மற்றும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினர். தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பிரபுவின் மனைவி சரண்யா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரில் பழமார்நேரி சாலையில் உள்ள பாரதிராஜாவுக்கும் தனது கணவருக்கும் இடம் குறித்து பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனையில் தற்போதைய பேரூராட்சி கவுன்சிலர் பாஸ்கரன், பாரதிராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். நேற்று இரவு பாரதிராஜா, மணிகண்டன், ரமேஷ் ,மஸ்தான் என்கிற நாகராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து கணவரை வெட்டி கொலை செய்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.

திருவையாறு துணைப்போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், மற்றும் திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக சிலரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. பிரமுகர் கொலை எதிரொலியாக திருக்காட்டுப்பள்ளி நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com