அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை குழு நியமனம்

விசாரணைக்குழு அதிகாரிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் நேரில் பார்வையிட உள்ளனர்.
அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை குழு நியமனம்
Published on

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்றது. அந்த சமயத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி சி.வி.சண்முகம் எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. அலுவலக மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த 3 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளாக சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் நேரில் பார்வையிட உள்ளனர். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட வழக்கில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com