அ.தி.மு.க. மாநாட்டு பிரசாரத்துக்கு பலூன் பறக்க விட அனுமதி மறுப்பு

பொள்ளாச்சியில் அ.தி.மு.க. மாநாட்டு பிரசாரத்துக்கு பலூன் பறக்க விட அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு 2 எம்.எல்.ஏ.க்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. மாநாட்டு பிரசாரத்துக்கு பலூன் பறக்க விட அனுமதி மறுப்பு
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் அ.தி.மு.க. மாநாட்டு பிரசாரத்துக்கு பலூன் பறக்க விட அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு 2 எம்.எல்.ஏ.க்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பலூன் பறக்க விட ஏற்பாடு

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பிரசாரம் செய்ய பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் ராட்சத பலூன் பறக்க விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அனுமதி பெறாததால் பேலீசார் பலூனில் இருந்த காற்றை வெளியேற்றினர். அப்போது அங்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் ஆகியோர் வந்தனர். அவர்களிடம், அனுமதி இல்லாமல் பலூன் பறக்க விடக்கூடாது என்று போலீசார் கூறினர். அதற்கு, இந்த இடத்தில் ஆண்டுதோறும் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது, அதற்கு எந்த அனுமதியும் வாங்குவதில்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார். இதனால் போலீசாருக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு வந்தனர். மேலும் அனுமதி கொடுக்கும் வரை அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். தொடர்ந்து பந்தல் அமைத்து எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சப்-கலெக்டர் தொடர்பு கொண்டு அனுமதி கொடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாச்சலம், நிர்வாகிகள் ரகுபதி, விஜயகுமார், ஓ.கே.முருகன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் பலூன் பறக்க விடப்படும் என்று அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

போலீசார் மீது குற்றச்சாட்டு

முன்னதாக பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

உடுமலை, கிணத்துக்கடவில் அ.தி.மு.க. மாநாட்டை வரவேற்று பேனர் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் பேனர் வைக்க அனுமதி வழங்கவில்லை.

இந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து பலூன் திருவிழா நடத்துகிறது. இங்கு அ.தி.மு.க. மாநாட்டை வரவேற்கும் வகையில் 50 அடி உயரத்துக்கு பலூனை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி வாங்க அவசியம் இல்லை. தனியாருக்கு சொந்தமான இடம் என்று கூறிய பிறகும் அனுமதி கொடுக்கவில்லை. இதற்கு முன்கூட்டியே வரும் போலீசார், இங்கிருந்து லாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டுகொள்வது இல்லை. குவாரிக்காரர்களை போலீசார் பாதுகாக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com