தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மக்களுக்கு மட்டுமல்ல பா.ஜ.க.,வுக்கு பயந்துதான் அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம் எல் ஏ வாக இருந்தவர் தி.மு.க. வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான அ. தி. மு. க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே. மு. தி. க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி. மு. க. , பா. ம. க. , நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

தி. மு. க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம். எல். ஏ. க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் பா. ம. க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா ஜனதா கூட்டணி தலைவர்களும் பா. ம. க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், விக்கிரவாண்டி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தும்பூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர். புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1.16 கோடி பேருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர்.புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

நமது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர் தோல்வி பயத்தால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக வை பார்த்து மட்டும் பயமில்லை. மக்களை பார்த்தே பயம். அதனால் தான் தேர்தலையே புறக்கணித்து விட்டார். பாஜக-வை பார்த்தும் பயம். அதனால் அவர்களுக்கு வழிவிட்டு போட்டியிடவில்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com