சமூக ஆர்வலர் கொலையில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

சமூக ஆர்வலர் கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சமூக ஆர்வலர் கொலையில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மனித உரிமை மீறல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நில மாபியாக்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ராஜ்மோகன்சந்திரா இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி செங்கம் சாலையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்தம் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன் (வயது 45) தரப்பினர் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பதி பாலாஜி, அவரது தந்தை காசி என்ற வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி (41), திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (32), தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (39), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (42), விஜயராஜ் (41), வடஆண்டாப்பட்டை சேர்ந்த சடையன் (40), செங்குணம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (50) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

8 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நடைபெற்று வந்த சமயத்தில் திருப்பதி பாலாஜியின் அண்ணன் செல்வமும், தந்தை காசியும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) இருசன்பூங்குழலி நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட திருப்பதி பாலாஜி, மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com