அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல்: 3 பேருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து

அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் கைதானவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த கலெக்டர் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கடத்தல்: 3 பேருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ரமேஷ். இவருடைய மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்து யூனியன் அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில், ரோஜாவையும், ஜேக்கப்பையும் கடந்த ஜனவரி மாதம் ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் காரில் கடத்தியது. பின்னர் அன்று மாலையே சத்தியவேடு பகுதியில் அவர்கள் இருவரையும் அந்த கும்பல் இறக்கி விட்டுச் சென்றது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆள் கடத்தலில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த செங்கல்வராயனின் மகன் சுரேந்திரன் (வயது 26), அவருடைய நண்பர்களான சந்தோஷ் (27), நவீன் (24), பாஸ்கர் (30) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், 4 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் பாஸ்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை அறிவுரைக்குழுமம் ரத்து செய்தது. இதையடுத்து சுரேந்திரன், சந்தோஷ், நவீன் ஆகியோருக்கு எதிரான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் வி.ஆர்.கமலநாதன் ஆஜராகி, "மனுதாரர்களுக்கு எதிராக வேறு வழக்குகள் இல்லை. சுரேந்திரன் குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தை அ.தி.மு.க. நிர்வாகி ரமேஷ் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார். எஞ்சிய நிலத்தையும் தன்னிடமே விற்க வேண்டுமென கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சுரேந்திரன் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் உரிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் இந்த 3 பேரும் எந்திரத்தனமாக குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்'' என்று வாதிட்டனர்.

இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களுக்கு எதிரான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளது எனக்கூறி அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com