எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; சட்டமன்ற கூட்டத்தொடர் செயல்பாடு குறித்து ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சட்டமன்ற கூட்டத்தொடர் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; சட்டமன்ற கூட்டத்தொடர் செயல்பாடு குறித்து ஆலோசனை
Published on

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

2023-ம் ஆண்டின் தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து சட்டமன்ற கூட்டத் தொடரில் செயல்படுவது குறித்த, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று மாலை நடந்தது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி (புரட்சிபாரதம்) உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவராக...

இந்த கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்னென்ன பிரச்சினைகளை எழுப்பலாம்? உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கரும்பு கொள்முதல் விலை, ஒப்பந்த நர்சுகள் போராட்டம், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எப்படி பேசவேண்டும்? மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி எப்படி விவாதிக்க வேண்டும்? என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அதேவேளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது குறித்தும், இதுகுறித்து சபாநாயகரிடம் மீண்டும் வலியுறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது சம்பந்தமாக இன்று (செவ்வாய்க்கிழமை) சபாநாயகரை சந்தித்து பேசுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலை.4.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், மாலை 6.30 மணிக்கு முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com