அ.தி.மு.க. நடத்தும் போராட்டம் கபட நாடகம் மு.க.ஸ்டாலின் தாக்கு

காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க. நடத்தும் போராட்டம் கபட நாடகம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
அ.தி.மு.க. நடத்தும் போராட்டம் கபட நாடகம் மு.க.ஸ்டாலின் தாக்கு
Published on

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் மடிப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரில் சந்தித்தார்.

அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது ஒரு போராட்டமல்ல, அவர்கள் ஒரு கபட நாடகத்தை அடிமைத்தனமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முடிவெடுக்க ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தக்கூட அவர்களுக்கு யோக்கியதை இல்லை. அமைச்சர்களை அழைத்து காலை முதல் மாலை வரை சத்தமேயில்லாமல் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதில் என்ன பேசப்பட்டது, என்ன முடிவெடுக்கப்பட்டது என்று சொல்லவில்லை.

உண்மையிலேயே காவிரி பிரச்சினையில் அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பியிருந்தால், குறைந்தபட்சம் அந்த அமைச்சரவை கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஒரு தீர்மானம் போட்டிருக்க வேண்டும். அதை செய்வதற்கு கூட லாயக்கற்ற, வக்கற்ற ஆட்சி நடக்கிறது.

தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பிரதமர் மோடியிடமும், மத்திய அரசிடமும் ஒரு அடிமையாக காலில் விழுந்து கிடக்கிறார்கள். எனவே, தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. அதற்கான முயற்சிகளில் துளியளவு கூட இந்த ஆட்சி ஈடுபடவில்லை என்ற காரணத்தினால் தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

துரோகத்துக்குத் துணைபோன அ.தி.மு.க.வின் உண்மை முகம், அவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் வெளிப்பட்டுள்ளது. மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் அ.தி.மு.க.வினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்துப் பேசத் துணிவில்லாமல், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் குறி வைத்து விமர்சித்து திசை திருப்பும் கீழ்த்தரமான அரசியல் செய்திருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள அ.தி.மு.க. பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கிற பெரும்பான்மையைத் தமிழ்நாட்டின் நலனுக்குப் பயன்படுத்தாமல் பா.ஜனதாவின் துரோகத்துக்குத் துணை நின்று வருகிறது. மக்களவையை முடக்கி, நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும் பா.ஜனதாவின் தந்திரமான ஏவலாட்களாக செயல்பட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது அ.தி.மு.க.

தங்கள் துரோகத்தையும் இயலாமையையும் மறைப்பதற்காக உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பா.ஜனதாவின் துரோகத்தைக் கண்டித்து மென்மையாகக் கூட எதையும் பேசும் திராணியில்லாத அ.தி.மு.க.வினர், கன்னியாகுமரி முதல் சென்னை வரை தி.மு.க.வை விமர்சித்து தங்கள் உண்மை முகத்தை காண்பித்துள்ளனர்.

நாங்களும் போராடினோம் என்று மக்களை ஏமாற்ற அ.தி.மு.க. போட்ட நாடகம், அவர்களது எஜமானர்களைக் கண்டிக்க முடியாத அவதி ஆகியவற்றால், மக்கள் மன்றத்தில் அவர்களுடைய முகத்திரை கிழிந்து அவமானத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com