'எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்தால் அ.தி.மு.க. படுதோல்வியை தழுவியது' ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்தால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. படுதோல்வியை தழுவியது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
'எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்தால் அ.தி.மு.க. படுதோல்வியை தழுவியது' ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள், தொண்டர்கள் இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., கட்சியை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்ற ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்த தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பல காரணங்களால் பொதுமக்கள் தி.மு.க. அரசின் மீது மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்ற நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பினை பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அ.தி.மு.க. அடைந்துள்ளது. இதற்கு காரணம் கட்சிக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை துரோகங்கள் தான்.

தமிழக அரசியல் வரலாற்றில், ஓர் இடைத் தேர்தலில், அ.தி.மு.க. 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தல் தான்.

எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தான் இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

ஆணவத்தால் படுதோல்வி

'தான்' என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் அ.தி.மு.க.வுக்கு உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகின்ற காரணத்தால் தான் தற்போதைய ஈரோடு தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்து உள்ளது.

தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, நடுநிலைமையோடு எல்லோரையும் அரவணைத்து கட்சியை மூத்த தலைவர்கள் முன்னின்று நடத்துவதுதான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு செலுத்துகின்ற நன்றிக் கடன் ஆகும்.

தொண்டர்களின் ஆதரவோடு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக வழியில், கட்சியின் அடிப்படை சட்ட திட்ட விதிகளைக் காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்திச் செல்லவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com