

சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, தமிழகத்தில் சமூகநீதிக்கான முதல் வெற்றியை நிலைநாட்டினார்.
சமுதாய நிலையிலும், கல்வித்துறையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கு உதவும்வகையில், மண்டல் குழுவின் பரிந்துரைகளை விரைந்து முழுமையாக நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், மண்டல் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் 27 சதவீதம் என்பதற்கு பதிலாக 50 சதவீதம் என்று இடஒதுக்கீடு செய்வதை கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசுத்துறைகள், மத்திய அரசுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, அனைத்துக்கல்வி நிலையங்களின் அனுமதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 30-9-1991 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தவர் ஜெயலலிதா.
தொடர்ந்து, 1993-ல் ஜெயலலிதா, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில், 1993-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிலையங்களில் இடங்களையும், அரசின்கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலைப்பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்து, இடஒதுக்கீட்டுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை உறுதிசெய்தார்.
இதனால், தமிழ்நாட்டில் இன்றும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த அ.தி. மு.க. அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இதர மத்திய கல்வி நிறுவனங்களில், ஓ.பி.சி. சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு 14-3-2018 அன்று கடிதம் எழுதியது.
தொடர்ந்து 13-1-2020 வரை பல நினைவூட்டுக் கடிதங்கள் எழுதப்பட்டன. மேலும், பிரதமரை நேரில் சந்திக்கும்போதும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற மத்திய அரசு குழு ஒன்று அமைத்தது. இக்குழுவில் தமிழ்நாடு அரசின் உறுப்பினராக டாக்டர் பி.உமாநாத், 13-8-2020 அன்று நியமிக்கப்பட்டார்.
இக்குழுவின் அறிக்கையின்படி 29-7-2021 அன்று, மருத்துவக்கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதலே (2021-2022) அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளதை அ.தி.மு.க.வின் சார்பில் வரவேற்கிறோம்.
மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அ.தி.மு.க.வின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீடு உரிமையும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதம் என்ற இலக்கை அடைவதற்கான முயற்சிகளை அ.தி.மு.க. தொடர்ந்து மேற்கொள்ளும்.
இந்த வெற்றி, அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க. தொடர்ந்து பின்பற்றிவரும் சமூகநீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.